சென்னைப் பல்கலைக்கழக பேரவைக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக, இளநிலை பட்டப் படிப்பு எழுத்துத் (தியரி) தேர்வுக் கட்டணத்தை தாள் ஒன்றுக்கு ரூ. 55-லிருந்து ரூ. 65-ஆக உயர்த்தவும், செய்முறைத் தேர்வுக்கான கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ. 60-லிருந்து ரூ. 65-ஆக உயர்த்தவும், முதுநிலை பட்ட எழுத்துத் தேர்வு கட்டணத்தை ரூ. 100-லிருந்து ரூ. 120 ஆக உயர்த்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபோல் எம்.ஃபில்., படிப்பு தியரி தாளுக்கான கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ. 200-லிருந்து ரூ. 150-ஆகக் குறைக்கவும், முதுநிலை பட்ட செய்முறைத் தேர்வுக்கான கட்டணம் நடைமுறையில் இருந்து வரும் ரூ. 150 என்ற அளவிலேயே வசூலிப்பதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மாற்றியமைக்கப்பட்ட தேர்வுக் கட்டணம் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவும் கடந்த ஜூன் 21-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment